

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலை சென்னை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே இன்று அதிகாலை கார் ஒன்று பள்ளத்தில் கவிந்து மரத்தின் மீது மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு நபர்களை நவீன கிரேன் மூலம் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மூன்று உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த உசேன் மனைவி ஷமீம் (50), உசேன் மகள் அம்ரின் (22), சையத் அமீனுதின் மகள் சுபேதா(21), ஆகியோர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது,
இவர்கள் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று சொந்த ஊரான சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது.