இறுதி கட்டத்தை எட்டும் சாத்தான்குளம் வழக்கு: பெண் ஏட்டு வாக்கு மூலத்தால் திருப்பம்

இறுதி கட்டத்தை எட்டும் சாத்தான்குளம் வழக்கு: பெண் ஏட்டு வாக்கு மூலத்தால் திருப்பம்
Updated on
1 min read

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு குறுக்கு விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சம்பவத்தின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த ரேவதியின் வாக்குமூலமே முக்கியமானதாக கருதப்பட்டது.

ஆனால், தற்போது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ரைட்டராக (ஏட்டு)பணிபுரிந்த பியூலா செல்வகுமாரியின் (தற்போது கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்) சாட்சியம் வழக்கைமுக்கிய கட்டத்துக்குக் கொண்டுசென்றுள்ளது. அவர் நீதிமன்றத்தில் 2 நாட்கள் சாட்சியமளித்தார். அவர் கூறியிருப்பதாவது:

சம்பவம் நடந்த 19.6.2020-ல் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பணியில் இருந்தேன். அன்றைய தினம் ஏட்டு ரேவதி பாரா பணியில் இருந்தார்.

இரவு 7.45 மணிக்கு ஜெயராஜை காவல் நிலையத்துக்கு காவல் ஆய்வாளர் தர் அழைத்து வந்தார். அவரை கையை நீட்டச் சொல்லி லத்தியால் போலீஸார் அடித்தனர்.

அப்போது, ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்துக்கு வந்தார்.அப்பாவை ஏன் அடிக்கிறீர்கள் எனக் கேட்டார். அவரை வெளியில் போகுமாறு போலீஸார் கூறினர். அதற்கு மறுப்புத் தெரிவித்த பென்னிக்ஸ், காவலர் முத்துராஜாவின் சட்டையை பிடித்துதள்ளிவிட்டார்.

உடனே பென்னிக்ஸை எஸ்ஐ பாலகிருஷ்ணன் அடிக்க சொன்னார். எஸ்ஐ பால்துரை, தனது வலது முழங்கையை பென்னிக்ஸ் முதுகில் குத்தினார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை நிற்க வைத்து அடித்தார்கள். காவலர்கள் முருகன், சாமத்துரை, வெயிலுமுத்து, செல்லத்துரை ஆகியோர் அவர்களது கையை பிடித்துக் கொண்டனர்.

எஸ்ஐ பாலகிருஷ்ணன் அடித்தார். என்னுடைய கைப்பையை எடுக்க உள்ளே சென்றபோது, அங்கிருந்த டேபிளில் பென்னிக்ஸை குப்புற படுக்க வைத்திருந்தனர். இதை பார்க்க மனம் இல்லாமல் வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.

இவ்வாறு அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

பியூலாவிடம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, பியூலா நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலம் உண்மையல்ல என ஸ்ரீதர் கூறினார். அதை பியூலா மறுத்தார். பின்னர் வழக்கு விசாரணையை செப். 26-க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in