

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவலின் பேரில் சாம்பை மாவட்டத்தின் மெல்புக் கிராமத்தில் மாநில போலீஸாரும் அசாம் ரைபில்ஸ் படையினரும் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஒரு வாகனத்தில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தாம் பேட்டமைன் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். 55.80 கிலோ எடை கொண்ட இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.167.86 கோடியாகும்.
இதுகுறித்து அசாம் ரைபில்ஸ் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மிசோரம் மாநிலத்தில் ஒரே நடவடிக்கையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
இதுவே முதல்முறையாகும். போதைப் பொருளுடன் ஒரு பெண் வியாபாரியை கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்.
மிசோரம் மாநிலத்தில் குறிப்பாக இந்தியா - மியான்மர் எல்லை நெடுகிலும் போதை மாத்திரைகள் கடத்தப்படுவது தற்போது கவலைக்குரிய முக்கிய விஷயமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.200 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருளை அசாம் ரைபிள்ஸ் படை பறிமுதல் செய்துள்ளது” என்றார்.