

ஆவடி அருகே மத்திய அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவில்பதாகை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (50). இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசின் படைத்துறை உடைத் தொழிற்சாலையில் (எச்விஎப்) ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு மூலக்கடையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர், நேற்று காலை வீட்டுக்கு திரும்பிவந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ளகண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: இதேபோல், திருவள்ளூரை அடுத்த நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர்தனது குடும்பத்தினருடன் மாங்காட்டை அடுத்த கொழுமணிவாக்கம் கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு கடந்த 19-ம் தேதியன்று வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றார்.
இந்நிலையில், வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்திருப்பதாக வினோத்தின் உறவினர் தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து, வினோத் உடனடியாக நேற்று முன்தினம் புறப்பட்டு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பென்னலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.