Published : 24 Sep 2022 06:06 AM
Last Updated : 24 Sep 2022 06:06 AM

வேலூர் | பெண் எரித்து கொலை: துணி வியாபாரிக்கு தீக்காயங்களுடன் சிகிச்சை

உயிரிழந்த திலகவதி. (கோப்புப்படம்)

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). துணி வியாபாரி. இவர், வேலூர் முள்ளிப்பாளையம் ராமகிருஷ்ணா தெருவில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்தார். இவருக்கும், வேலூர் கன்சால்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின் மனைவி திலகவதி (32) என்பவருக்கும் கூடா நட்பு இருந்துள்ளது. இதனால், கூலி வேலைக்கு கோபி சென்றதும், திலகவதி முள்ளிப்பாளையத்தில் உள்ள ரமேஷின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், முள்ளிப் பாளையத்தில் ரமேஷின் வீட்டுக்கு திலகவதி வழக்கம்போல் நேற்று காலை வந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதுடன், உடலில் தீப்பற்றிய நிலையில் ரமேஷ் வெளியே ஓடி வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்து எழுந்தவர் பழைய பெங்களூரு சாலையை நோக்கி ஓடினார். அங்கு திரண்ட பொதுமக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பலத்த தீக்காயங்களுடன் திலகவதி கூச்சலிட்டார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதற்குள் ரமேஷ் ஆட்டோவில் செல்லும்போது தீக்காயங்களால் வலி தாங்காமல் துடித்துள்ளார். கோட்டை அருகே வந்தபோது ஆட்டோவில் இருந்து இறங்கியவர் ஓடிச்சென்று அகழி தண்ணீரில் குதித்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் ரமேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்த தகவலின்பேரில் வேலூர் வடக்கு காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினர் நடத்திய முதற் கட்ட விசாரணையில் திலகவதிக்கும், ரமேஷூக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் திலகவதியின் உடலில் பெட்ரோலை ஊற்றி கொலை செய்ய முயன்றபோது ரமேஷூக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதற்கிடையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட திலகவதி நேற்று மாலை 7 மணியளவில் உயிரிழந்தார். 50 சதவீதம் தீக்காயங்களுடன் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x