

பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, அவர்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த வேல் சத்ரியன் (38) என்பவர், சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகே நோபல் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனப் பெயரில், சினிமா தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்.
இவரது நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயஜோதி (33) உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 1-ம் தேதி அளித்த புகாரில், சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, வேல் சத்ரியனும், ஜெயஜோதியும் தன்னை ஆபாசமாக படம் எடுக்க முயன்றதாகவும், தான் அதற்கு மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து, அவற்றை காண்பித்து, மிரட்டி, அந்தப் பெண்களிடம் பணம் பறித்தது தெரிய வந்ததாகவும் புகாரில் கூறியிருந்தார்.
தொடர்ந்து, வேல் சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெண்களை ஆபாசமாக படமெடுத்து பதிவு செய்து வைத்திருந்த மெமரி கார்டு, லேப்டாப், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பல இளம்பெண்களை ஏமாற்றி, ஆபாச படம் எடுத்து மிரட்டி, பொது ஒழுங்கிற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட வேல் சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் உள்ள வேல்சத்ரியனுக்கும், சேலம் பெண்கள் கிளைச் சிறையில் உள்ள ஜெயஜோதிக்கும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.