Published : 22 Sep 2022 03:51 AM
Last Updated : 22 Sep 2022 03:51 AM
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்பிலான `ஹெராயின்' என்ற போதைப் பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப் பொருட்கள் நவசேவா துறைமுகத்துக்கு கடத்தி வரப்படுவதாக டெல்லி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், டெல்லி போலீஸார் மும்பைக்கு விரைந்து, கப்பலில் இருந்து வந்திறங்கிய கன்டெய்னர்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஒரு கன்டெய்னரில் 22,000 கிலோ (22 டன்) எடையுள்ள அதிமதுர வேர்கள் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அதிமதுரக் குச்சிகளின் வேர்களில் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.1,725 கோடி என்று கூறப்படுகிறது.
கன்டெய்னரில் கடத்தி வந்த ஹெராயினை டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினர் கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் அருகே, ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருட்கள் கைப்பற்றிய பகுதிக்கு வந்து விசாரணை நடத்திய பின்னர், சிறப்பு காவல் ஆணையர் எச்.ஜி.எஸ்.தலிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து, மும்பையைத் தளமாகக் கொண்டு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி காவல் துறைக் குழுவினர் உடனடியாக மும்பை விரைந்து, நவசேவா துறைமுகத்தை சுற்றிவளைத்தனர்.
அங்கு டெல்லிக்கு அனுப்பப்படுவதற்காக இருந்த ஒரு கன்டெய்னரை முழுமையாகச் சோதனை செய்தோம். அதில், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் விளையும் அதிமதுரத்தின் வேர்ப் பகுதியில் ஹெராயின் என்ற போதைப் பொருளைத் தடவி, கப்பலில் அனுப்பிவைத்திருந்தது தெரியவந்தது.
ஏறத்தாழ 22 டன் அளவுக்கு அதிமதுர வேர்களை இறக்குமதி செய்துள்ளனர். அதன் வேர்ப் பகுதிகளில் ஹெராயின் போதைப் பொருள் தடவப்பட்டு இருந்தது.
அந்த வேர்களில் இருந்து மொத்தம் 345 கிலோ அளவுக்கு ஹெராயின் போதைப் பொருள் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டு உள்ளது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.1,725 கோடியாகும். கன்டெய்னர் அனுப்பப்பட்ட நாடு, இடம், யார் அனுப்பி உள்ளார்கள் என்ற விவரத்தை விசாரித்து வருகிறோம்.
இந்த கன்டெய்னர் வெளிநாட்டிலிருந்து, டெல்லியில் உள்ள ஒரு விலாசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த விலாசம் தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். வெளிநாடுகளைச் சேர்ந்த பலர், இந்தியாவில் போதைப் பொருளை விற்பனை செய்து வருவதும், அதைக் கடத்துவதற்கு பல்வேறு விதமான யுத்திகளை மேற்கொள்வதும் தற்போது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து ஏராளமான போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குறிப்பாக, குஜராத் மாநிலத்தில்தான் அதிக அளவில் போதைப் பொருட்கள் பிடிபட்டு வருகின்றன. கடல் வழியாகத்தான் பல்வேறு நாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப் பொருட்கள் இந்தியாவுக்குக் கடத்தப்படுகின்றன.
பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு, விநியோகிக்கப்படுதாக புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில், ஈரானிலிருந்து வந்த கப்பலில் சோதனை நடத்தியதில் கண்டெய்னரில் 3,000 கிலோ போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21,000 கோடியாகும்.
தொடரும் கடத்தல்
இதுதவிர, பாகிஸ்தானில் இருந்து அடிக்கடி படகில் குஜராத் கடற்கரைக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இதனால் குஜராத் கடற்கரைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் குஜராத்தின் அங்களேஸ்வர் பகுதியில், தடை செய்யப்பட்ட ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் தயாரித்து வந்த ஆலையை மும்பை போலீஸார் கண்டறிந்தனர்.
அங்கிருந்து சுமார் ரூ.1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, அண்மையில் குஜராத் கடற்கரையில் ரூ.200 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களைக் கடத்தி வந்ததாக, பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 7-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேரிடமிருந்து ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். தலைநகர் லக்னோவில் ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 312.5 கிலோ 'மெத்தம்பேட்டமைன்' மற்றும் 10 கிலோ ஹெராயின் ஆகிய போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், கோவா மாநிலத்தில் மர்மமான முறையில் இறந்த பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகட் குடித்த பானத்தில், மெத்தம்பேட்டமைன் கலந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது நரம்பு மண்டலத்தில் மிக அதிக போதையை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இதுபோன்ற போதைப் பொருட்களை இளைஞர் சமுதாயம் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. இதனால் இவற்றை அதிக அளவில் விலைகொடுத்து வாங்கி, அதை உட்கொள்வதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போதைப் பொருட்களை வெளிநாட்டுக் கும்பல் கடத்துவதும், அதை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT