

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே திமுக வார்டு உறுப்பினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண் உட்பட 5 பேர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த நடுவீரப்பட்டு எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(31). இவர் இந்த கிராமத்தின் 7-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
இதே ஊரைச் சேர்ந்த திமுக பிரமுகர் எஸ்தர்(எ) லோகேஸ்வரி(37) டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதை அறிந்த சதீஷ், அச்செயலைத் தடுத்ததால் இவருக்கும், எஸ்தருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே சிலமுறை பேச்சுவார்த்ைத நடத்தப்பட்டு அவை தோல்வியில் முடிந்துள்ளன. இந்த மது விற்பனை தொடர்பாக போலீஸாருக்கு சதீஷ் தகவல் தெரிவிக்க, போலீஸாரும் மது விற்பனையை நிறுத்தும்படி எஸ்தரை எச்சரித்திருந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: இதனால் ஆத்திரமடைந்த எஸ்தர் பேச்சுவார்த்தைக்காக சதீஷை அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சதீஷ் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சதீஷை வெட்டி கொலை செய்துவிட்டு அவரது சடலத்தை வெளியில் இழுத்து வந்து போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக சோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்தச் சூழ்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக எட்டையபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜன் மனைவி எஸ்தர் (38), நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் நவமணி(28), புதுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜி மகன் சதீஷ்(31), விஜயன் மகன் கோழி என்கிற அன்பு (25), ராமானுஜம் மகன் ராஜேஷ்(37) ஆகிய 5 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் மது விற்பனையை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை நடைபெற்றிருப்பது தெரியவந்தது. சரணடைந்தவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சோமங்கலம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பெண் ஒருவர், வார்டு உறுப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுபோல் வீட்டுக்கு அழைத்து வெட்டி கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.