Published : 22 Sep 2022 04:35 AM
Last Updated : 22 Sep 2022 04:35 AM

கோவையில் அழகு நிலைய ஊழியரை கொன்றதாக பெண் உட்பட மூவர் கைது

கோவை

கோவையில் அழகு நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை வெள்ளகிணறு பிரிவு வி.கே.எல் நகரில் சாலையோர குப்பைத் தொட்டியில் கடந்த 15-ம் தேதி துண்டாக வெட்டப்பட்ட கை கிடந்தது.

துடியலூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், துண்டாக கிடந்த கை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த பிரபு(40) என்பவருடையது எனவும், அவர் கோவையில் தங்கி, காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவரது மற்ற உடல் பாகங்கள் துடியலூர் சந்தை கிணற்றில் நேற்று கண்டறியப்பட்டன. இக்கொலை வழக்குதொடர்பாக துடியலூர் காவல்துறையினர் விசாரித்து மூவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘உயிரிழந்த பிரபுவுக்கு, சரவணம்பட்டியைச் சேர்ந்த அழகு நிலையம் நடத்தி வரும் கவிதா என்பவருடன் அறிமுகம் இருந்துள்ளது.

அவரது புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு பிரபு மிரட்டியுள்ளார். இதனால் ஐடி பார்க் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் அமுல் திவாகர்(34), கார்த்திக் (28) ஆகியோர் உதவியுடன் பிரபுவை வீட்டிற்கு வரவழைத்து கவிதா கொலை செய்ததும், 12 பாகங்களாக உடலை வெட்டி வீசியதும் தெரியவந்தது.

தனிப்படை காவல் துறையினர் பிரபுவின் வெட்டப்பட்ட 8 துண்டு உடல் பாகங்களை கைப்பற்றினர். மேலும் அமுல் திவாகர், கார்த்திக், கவிதா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,’’ என்றார். டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x