Published : 22 Sep 2022 06:02 AM
Last Updated : 22 Sep 2022 06:02 AM

கஞ்சா விற்ற 4 பேருக்கு 10 ஆண்டு சிறை | சமூகத்தை சீரழிக்கும் நோயான போதைப்பொருள் பயன்பாடு என நீதிபதி கருத்து

சென்னை: கஞ்சா விற்ற வழக்கில் தேனியைச் சேர்ந்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சமூகத்தை சீரழிக்கும் நோயாக மாறிவிட்ட போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஜூலை 6-ம் தேதி, சென்னை ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன், கதிரேசன், மணிமாறன், தெய்வம் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிபதி ஜூலியட் புஷ்பா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாண்டியன் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், ‘சமீபகாலமாக இளம்பருவத்தினர் போதைப் பொருளுக்கு அதிக அளவில் அடிமையாகி வருவது சமூகத்துக்கு ஆபத்தானது. போதைப்பொருள் பயன்பாடு சமூகத்தை சீரழிக்கும் பயங்கர நோயாக மாறிவிட்டது. போதைப்பொருள் கடத்தல், நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமின்றி, பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் துணைபோகிறது. எனவே, சமூகத்தில் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் கடத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்’ எனநீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x