

பெங்களூரு: சென்னையை சேர்ந்த மருத்துவர் விகாஷ் ராஜன் (27) கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளரை காதலித்தார். இவர்களின் திருமணத்துக்கு குடும்பத்தினர் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி விகாஷ் ராஜன் சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி, தன் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனது நெருங்கிய நண்பர்களுக்கும் அந்த புகைப்படங்களை அனுப்பியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த காதலி, விகாஷ் ராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் தனது ஆண் நண்பர்கள் 3 பேருடன் கடந்த 10-ம் தேதி விகாஷ் ராஜனின் வீட்டுக்கு சென்று, புகைப்படங்களை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, மோதல் ஏற்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரின் நண்பர்களும் சேர்ந்து தாக்கியதில் விகாஷ் ராஜன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து பி.டி.எம். லே-அவுட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஷ் ராஜன் கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பேகூர் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து, விகாஷ் ராஜனின் காதலி, அந்த பெண்ணின் நண்பர்கள் கவுதம் (26), சுஷில் (27), சூர்யா (29) ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர்.