Published : 21 Sep 2022 06:33 AM
Last Updated : 21 Sep 2022 06:33 AM

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - வடமாநில இளைஞருக்கு ஆயுள் முழுவதும் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி (21) என்பவருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் 2020-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி 8 வயது மாணவி ஒருவர் பள்ளி முடிந்து வீடு திரும்பினார். பின்னர், மாலையில் இயற்கை உபாதையைக் கழிக்க சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இரவு முழுவதும் உறவினர்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. தகவலறிந்து வந்த மாரனேரி போலீஸார் சுற்று வட்டாரங்களில் தேடியபோது அருகே உள்ள காட்டு பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீஸார் சிறுமியன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் தொடர்புடைய, பேரநாயக்கன்பட்டியில் அரிசிபை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய அசாம் மாநிலம், நல்பேரி மாவட்டத்தைச் சேர்ந்த மஜம் அலி (21) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளி மஜம் அலிக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் நேற்று தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x