Published : 21 Sep 2022 07:06 AM
Last Updated : 21 Sep 2022 07:06 AM
கோவை அருகே குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்டது அழகு நிலைய ஊழியரின் கை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோவை வெள்ளக்கிணறு பிரிவு வி.கே.எல் நகரில் உள்ள சாலையோர குப்பைத் தொட்டியில் கடந்த 15-ம் தேதி துண்டாக வெட்டப்பட்ட கை கிடந்தது.
துடியலூர் காவல்துறையினர் கையை கைப்பற்றி விசாரித்ததில், அது ஆணின் இடது கை எனவும், அது வெட்டப்பட்டு 3 நாட்கள் இருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, காணாமல் போனவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி யைச் சேர்ந்த பிரபு(40) என்பவர் மாயமானது தெரியவந்தது. கோவை காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், சரவணம்பட்டியில் வீடு எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்தார். பிரபுவுக்கு திருமணமாகி மனைவி ஈரோட்டில் வசித்து வருகிறார். பிரபு மாதத்துக்கு இருமுறை ஈரோட்டுக்குச் சென்றுவந்தார்.
கடந்த 14-ம் தேதி ஈரோட்டுக்கு புறப்பட்டவர் வீடு சென்று சேரவில்லை. செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்த தால் சந்தேகமடைந்த அவரது மனைவி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் காவல்துறையினர் மாயமானோர் பிரிவில் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், துண்டாக கிடந்த கை பிரபுவுடையதாக இருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிரபு தங்கியிருந்த அறையில் பதிவாகியிருந்த அவரது கை ரேகையை மீட்கப்பட்ட கையில் இருந்த ரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரண்டும் ஒத்துப் போனது.
இருப்பினும் மீட்கப்பட்டது பிரபுவின் கை என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆதாரங்களை காவல்துறையினர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரபுவின் நிலை என்ன என்பது தெரியவில்லை. போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT