

சென்னை: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரவுடியை போலீஸில் காட்டிக் கொடுத்த இளம் பெண்ணை ரவுடியின் உறவினர்கள் மிரட்டியதால், மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அண்ணாநகர் அன்னை சத்தியாநகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (26). இவருக்குத் திருமணமாகி விஜயகுமார் என்ற கணவரும், 6 மற்றும் 4 வயதில் இரு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பும், இளைய மகன் எல்கேஜியும் படித்து வருகின்றனர்.
கணவர் விஜயகுமார் சரியான வேலை இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, மகாலட்சுமி அண்ணா நகரில் உள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் துப்புரவு வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ரவுடியான ராபர்ட் என்பவர் கடந்த சில மாதங்களாக மகாலட்சுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த மகாலட்சுமி கடந்த சிலதினங்களுக்கு முன், ராபர்ட் மீதுஅண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்ஆய்வாளர் கோபால குரு தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து ராபர்ட்டை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ரவுடியின் உறவினர்கள் அடிக்கடி மகாலட்சுமி வீட்டுக்குச் சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மகாலட்சுமியின் வீட்டுக்கு, ராபர்டின் உறவினர் அம்மு (36) உட்பட மேலும் சிலர் சென்று தகராறு செய்தனராம்.
இதனால் மன வேதனை அடைந்த மகாலட்சுமி வீட்டில் தீக்குளித்தார். வலி தாங்காமல் துடித்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மகாலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தற்கொலைக்குத் தூண்டியதாக அம்முவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற மகாலட்சுமியிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட் மரண வாக்குமூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை: தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்கக் கூடுதல் டிஜிபி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் 181 என்ற எண்ணிலும், குழந்தைகள் உதவி எண் 1098 மூலமும் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். மேலும், காவலன் செயலி மூலமும் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இப்பிரிவின் கூடுதல் டிஜிபி வன்னிய பெருமாள் தெரிவித்தார்.