Published : 20 Sep 2022 06:46 AM
Last Updated : 20 Sep 2022 06:46 AM

முன்னாள் ஊராட்சி தலைவர் கொலையில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை: புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை: உள்ளாட்சித் தேர்தல் முன்விரோத தகராறில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ்(49). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த எஸ்.இளையராஜாவுக்கும் (39) உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, இளையராஜா உள்ளிட்ட சிலர் கடந்த 2012-ல் ஆனந்தராஜை வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் டி.முத்து(50), திருச்சியைச் சேர்ந்த கே.பாஸ்கர்(25), பி.மதன்குமார்(26), கே.மாரியப்பன்(23), கணபதிபுரத்தைச் சேர்ந்த ஏ.பிரகாஷ்(35), ஏ.ஆசைத்தம்பி(44), என்.திருநாவுக்கரசு(30), வி.குட்டிமணி(39), ஆர்.மதி(49), எஸ்.கருணாநிதி(48), எம்.மார்க்கண்டேயன்(48) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால், நேற்று தனது தீர்ப்பை வழங்கினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட இளையராஜா, முத்து ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், பாஸ்கர், மதன்குமார், மாரியப்பன் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த மற்ற 7 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x