Published : 20 Sep 2022 07:53 AM
Last Updated : 20 Sep 2022 07:53 AM

கடனை திருப்பிச் செலுத்த வங்கி ஊழியர்கள் நெருக்கடி குடும்பத்துடன் விஷம் குடித்த ஊழியர்; 2 பேர் உயிரிழப்பு: 2 பேருக்கு தீவிர சிகிச்சை

சென்னை: கடனைத் திருப்பிச் செலுத்தும்படி வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால், தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள செங்கேணி அம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர்ராம்குமார்(35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆய்வக பராமரிப்புப் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

ராம்குமாரின் தாயார் மீனாட்சி(58), அவர் சகோதரி சந்தானமாரி(40), மகள் மோகனப்பிரியா(20). இவர் சிறிது மனவளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ராம்குமார் வீட்டில் இருந்து அலறல் குரல் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, 4பேரும் விஷம் அருந்தி, வாயில்நுரை தள்ளிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த நீலாங்கரை போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் சந்தானமாரியும், மோகனப்பிரியாவும் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த ராம்குமாரும், மீனாட்சியும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

போலீஸார் தீவிர விசாரணை: இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். வங்கிகளில் ராம்குமார் அதிகம்கடன் பெற்றுள்ளதும், வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலையில், வங்கி ஊழியர்கள் ராம்குமாரிடம் கடனையும், வட்டியையும் கேட்டு அவரை நெருக்கடிக்கு உள்ளாகியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x