

ஓசூர்/கிருஷ்ணகிரி: ஓசூரில் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 2 பேரை கைது செய்தனர். ஓசூர் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
ஓசூர் ரயில் நிலையம் அருகே அருண்குமார் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் ரூ.7,70,000 டிபாசிட் செய்தால் இணையதள முகவரி வழங்கப்படும். அதில் உங்கள் டிபாசிட் தொகைக்கு பாயின்ட் காயின் அதிகரிக்கும். அதன்படி வாரம் வாரம் ரூ.93 ஆயிரம் உங்களுக்கு வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்நிறுவனத்தில் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், ஷங்கர், ஞானசேகர், சீனிவாசன், பிரகாஷ், வேலன் ஆகியோர் முகவர்களாக பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் ஓசூர், மத்தூர், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் உட்பட மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி யுனிவர் காயின் நிறுவனத்தில் டிபாசிட் செய்ய வைத்துள்ளனர்.
அதன்படி, இந்நிறுவனத்தில் ஏராளமானவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை டிபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யுனிவர் காயின் நிறுவனம் மூலமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. பிறகு பணம் வழங்காமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள், யுனிவர் காயின் உரிமையாளர் அருண்குமார் மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம்புகார் அளித்தனர். புகாரில் சுமார்ரூ.500 கோடி வரை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ரூ.100 கோடி வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல, இந்நிறுவனம் மீதுகாவேரிப்பட்டணத்தை அடுத்த வரட்டம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் (46) தலைமையில் 60-க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இப்புகாரை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவக்குமார், சேலம் டிஎஸ்பி சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 50 பேர் ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர், பெருகோபனப்பள்ளி. தண்டேகுப்பம், தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ஓசூர் ரயில் நிலையம் அருகே உள்ள யுனிவர் காயின் அலுவலகத்துக்கு போலீஸார் சீல் வைத்தனர்.
6 பேர் மீது வழக்கு: சோதனையில், பிரகாஷ் வீட்டில் 12 பவுன் நகையும், சீனிவாசன் வீட்டில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.30 லட்சம் மதிப்பில் சொகுசு கார் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அருண்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்டபிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர்.