கோவில்பட்டி | காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: பாஜக நகர தலைவர் உட்பட 6 பேர் கைது
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல் ஆய்வாளர், காவலரை தாக்கிய வழக்கில் நகர பாஜக தலைவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்துக்கள் குறித்து அவதூறாகபேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து நேற்று மாலை இந்துமுன்னணி சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான போஸ்டர்களை சிலர் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்தகிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்சுஜித் ஆனந்த், ‘அனுமதி பெறாமல் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது’ எனக் கூறி போஸ்டர்களை பறிமுதல் செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நகரபாஜக தலைவர் எம்.சீனிவாசன் தலைமையிலான சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து எட்டயபுரம் சாலையில் ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் வாகனத்தை முந்திச் சென்று மறித்தனர். மோட்டார் சைக்கிளில் இடித்து போலீஸ் வாகனம் நின்றது.
இதையடுத்து அவர்கள், காவல்ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் பாண்டீஸ்வரனை திடீரென தாக்கினர். இதை தடுக்க முயன்ற காவல் ஆய்வாளருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து கூடுதல் போலீஸார் வந்ததை பார்த்த பாஜகவினர் அங்கிருந்து தப்பியோடினர். சீனிவாசன், பாஜக நிர்வாகி ரகுபாபு ஆகியோரை மட்டும் போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த காவல் ஆய்வாளர், காவலர் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர், காவலர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக எம்.சீனிவாசன் (60),ரகுபாபு (27), இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் செ.வெங்கடேஷ் (27), நிர்வாகிகள் ப.பரமசிவன் (60), மு.சீனிவாசன் (44), வெ.பொன் சேர்மன்(28) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
