

சேலம்: சேலத்தில் போக்குவரத்து காவலரை தாக்கி காயமடையச் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த கோகுல்ராஜ்(23) வந்தார்.
அவரை, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பாண்டியன் தடுத்து, தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்தது குறித்து கேள்வி எழுப்பியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, கோகுல்ராஜ் தாக்கியதில் பாண்டியன் காயமடைந்தார். இது தொடர்பாக கோகுல்ராஜ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, கடந்த ஜூன் மாதம், சேலம் அண்ணா நகர் முதல் தெருவில், சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிவபிரசாந்த் என்பவரை, கோகுல்ராஜும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து, தாக்கியுள்ளனர். இது தொடர்பாக, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கோகுல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில், மக்களை அச்சப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட கோகுல்ராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கு மாநகர காவல் ஆணையர் நஜ்முல்ஹோடா ஆணை பிறப்பித்தார். இதையடுத்து, சிறையில உள்ள கோகுல்ராஜ் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.