Published : 18 Sep 2022 04:55 AM
Last Updated : 18 Sep 2022 04:55 AM

குடியாத்தம் | ரூ.1 கோடி பணம் கேட்டு உறவினர் கடத்தல்: 2 பேர் துப்பாக்கி முனையில் கைது

குடியாத்தம் அருகே ரூ.1 கோடி பணம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான சுரேஷ், ராஜ்குமார்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே ரூ.1 கோடி பணம் கேட்டு உறவினர் கடத்தப்பட்ட வழக்கில் 2 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு திட்டம் வகுத்த மருமகனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (47). இவர், காட்பாடியில் உள்ள ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் கணக்காளராகவும் முகவராகவும் இருந்துள்ளார்.

இதனால், குடியாத்தம், பரதராமி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தான் பணியாற்றும் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி பெற்றுத்தருவகாக கூறி பல லட்சங்கள் பணம் வசூலித்து முதலீடு செய்துள்ளார்.

அதே நேரம், ஆருத்ரா நிதி நிறுவன முறை கேடு புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்ததால் முதலீட்டாளர்களின் பணம் முடங்கியது.

இதனால், தாமோதரனிடம் பணம் கொடுத் தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், வழக்கு காரணமாக அவர்களிடம் கால அவகாசம் கேட்டு வந்துள்ளார்.

இதற்கிடையில், பரதராமியில் இருந்து கடந்த 12-ம் தேதி தாமோதரன் திடீரென மாயமானார். எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில் மாயமான தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்கு மாறு பரதராமி காவல் நிலையத்தில் தாமோதரனின் மனைவி மகாலட்சுமி புகார் அளித்தார்.

அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை செய்துவந்த நிலையில் கடந்த 14-ம் தேதி மகாலட்சுமியின் செல்போனுக்கு வந்த அழைப்பில் பேசிய தாமோதரன், ‘தான் கடத் தப்பட்டு இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்து விட்டால் விட்டு விடுவார்கள்’ என கூறியுள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் தனிப்படையினர் விசாரணையை துரிதப்படுத்தினர். மேலும், மகாலட்சுமி உதவியுடன் அவர்களை பிடிக்க திட்டமிட்டனர்.

ஆனால், கடத்தல் கும்பல் போக்கு காட்டி வந்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையில் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதை நேற்று முன்தினம் கண்டுபிடித்தனர்.

அங்கு சென்ற தனிப்படையினர் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். ஒருவர் தப்பியோடினார். அங்குள்ள புதரில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த தாமோதரனை மீட்டனர்.

பிடிபட்டவர்கள், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (32), ராஜ்குமார் (30) என்றும், தப்பியோடியவர் ரமேஷ் என்றும் அவர் தாமோதரனின் அண்ணன் மருமகன் என்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில், எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் ரமேஷ், சிறிய மாமனார் தாமோதரன் மூலம் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் ரூ.23 லட்சம் முதலீடு செய்துள்ளார். அவரது உறவினர்கள், நண்பர்கள் என பல லட்சங்கள் என ஒரு கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளார்.

அந்த பணம் முடங்கியதால் தாமோதரனை கடத்தி பணத்தை மீட்க ரமேஷ் முயற்சித்துள்ளது தெரியவந்தது. இந்த கடத்தல் நாடகத்தில் 2 பேர் கைதான நிலையில், தப்பியோடிய ரமேஷ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x