Published : 17 Sep 2022 06:58 PM
Last Updated : 17 Sep 2022 06:58 PM

ஜார்க்கண்ட் அதிர்ச்சி | கர்ப்பிணி மீது டிராக்டர் இயக்கிய கடன் ஏஜெண்ட் - உயிரிழப்புக்கு வருந்திய மஹிந்திரா குழும சிஇஓ

ஹசாரிபாக்: மாதத் தவணையில் வாங்கிய டிராக்டருக்கு முறையாக இ.எம்.ஐ செலுத்தாத விவசாயி ஒருவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்ய தனியார் நிதி நிறுவனம் சென்றுள்ளது. அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியபோது, மறியல் செய்த விவசாயியின் கர்ப்பிணி மகள் மீது வாகனத்தை மீட்க சென்று முகவர் டிராக்டரை இயக்கியதில், அந்தப் பெண் உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் நடந்துள்ளது. அந்த விவசாயிக்கு மஹிந்திரா தனியார் நிதி நிறுவனம் தவணை தொகையில் கடன் வழங்கியுள்ளது. அந்த விவசாயி மாற்றுத் திறனாளி எனத் தெரிகிறது. ஆனால், அவர் கடன் தவணையை முறையாக திரும்ப செலுத்த தவறியுள்ளார். சுமார் 1,20,000 ரூபாய் அவர் செலுத்த வேண்டும் எனத் தெரிகிறது.

உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்காமல் வாகனத்தை மீட்க முகவரின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அந்த டிராக்டர் அந்த ஊரில் இருந்த பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தங்களிடமிருந்த மாற்று சாவியை பயன்படுத்தி அவர்கள் டிராக்டரை எடுத்து சென்றுள்ளனர்.

இந்தத் தகவல் விவசாயிக்கு தெரியவர நிதி நிறுவன அதிகாரிகளை மறித்து நியாயம் கேட்டுள்ளார். உடன் அவரது 27 வயது மகளும் இருந்துள்ளார். அவர் 3 மாதம் கர்ப்பம் என தெரிகிறது. இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விவசாயியின் மகள் டிராக்டரை மறித்துள்ளார். இருந்தும் அதனை மீட்கச் சென்ற முகவர் அவர் மீது டிராக்டரை இயக்கியுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வியாழன் அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளது காவல் துறை. வாகன மீட்பு முகவர் மற்றும் நிதி நிறுவன மேலாளர் உட்பட நான்கு பேர் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹிந்திரா குழுமத் தலைமை செயல் அதிகாரி, இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். “ஹசாரிபாக் சம்பவம் எங்களை வருத்தத்திலும், கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு நாங்கள் முழுவதுமாக ஒத்துழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x