Published : 17 Sep 2022 06:46 AM
Last Updated : 17 Sep 2022 06:46 AM
கிருஷ்ணகிரி: ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.22.75 லட்சம் மோசடி செய்த 2 பேரை, சைபர் கிரைம் போலீஸார் மும்பையில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அசோகன் (34). இவர் தனியார் நிறுவனத்தில் வீட்டு கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் அசோகனை, தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் பிரிட்டனில் விலங்குகள் பராமரிப்பு செய்யும் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், கால்நடைகளுக்கு மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்கள் இந்தியாவில் அதிகம் கிடைப்பதால், அதனை வாங்கி கொடுத்தால் அதிக வருவாய் கிடைக்கும் என தெரிவித்தார்.
அவர் கூறிய தகவலின்படி, அணில்லாலா என்பவரை அசோகன் தொடர்பு கொண்டு கால்நடை மருந்து மூலப்பொருட்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டை வாங்கி அனுப்பினார். இதனை தொடர்ந்து மீண்டும் தொடர்பு கொண்ட விலங்குகள் பராமரிப்பு நிறுவன மேலாளர், தனக்கு ரூ.22.75 லட்சம் அளவிற்கு மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது.
இதனை வாங்கி அனுப்பினால், கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பிய அசோகன், அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.22.75 லட்சம் அனுப்பி வைத்தார். அதன்பின்னர் அசோகனை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
இதில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோகன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக டிஎஸ்பி சங்கு தலைமையில் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் அசோகனிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள், மும்பையில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீஸார் அங்கு சென்று 2 பேரையும் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள், மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அடுத்த பஞ்சவதியை சேர்ந்த பாண்டுரங் சிவ்ராம் சம்பத்வார்(34), அவுரங்காபாத் அடுத்த அம்ருட்தம் பகுதியை சேர்ந்த சுனில்சுதம் நிகம்(32) என தெரிந்தது. 2 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து, 5 செல்போன்கள், 10 சிம் கார்டு, ஒரு மடிக்கணினி மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம், காசோலை, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரையும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT