

சென்னை: சென்னை, மண்ணடி, மூர் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜதுரை (22). இவர் கடந்த 12-ம் தேதி கல்லூரி முடிந்து பேருந்தில் பயணம் செய்து ராஜாஜி சாலை ஆவின் பூத் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்.
அப்போது, அவரது சட்டை பையில் இருந்த செல்போன் திருடுபோனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ராஜதுரை இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
இதில், செல்போன் பறிப்பில்ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டை கல்லறைச் சாலை பாலு (33), அதே பகுதி சத்யா (26) என்பது தெரிந்தது. திருட்டு செல்போன்களை வாங்கிய குற்றத்துக்காக மண்ணடி, வேலாயுதம் தெரு சையது (38), தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மருதுபாண்டி (55) ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 22 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுப்படி..
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பாலு வண்ணாரப்பேட்டை காவல் நிலையசரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் தனது கூட்டாளியான சத்யா என்பவருடன் சேர்ந்து பேருந்தில் பயணம் செய்து பயணிகள் மற்றும் தனியாக நடந்து செல்லும் நபர்களிடமிருந்து செல்போன்களை திருடி, சையது மூலம் மருதுபாண்டியன் என்பவரிடம் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.