Published : 15 Sep 2022 10:04 AM
Last Updated : 15 Sep 2022 10:04 AM

அருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்குப் பின் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் மரணம்

உயிரிழந்த இளைஞர் தங்கப் பாண்டி

போலீஸ் விசாரணை முடிந்து காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில்தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். சமையல் தொழிலாளி. நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டின் சுற்றுச்சுவர் ஏறிக் குதித்து, இளைஞர் ஒருவர் உள்ளே வந்துள்ளார்.

இதைப் பார்த்து அருகிலிருந்தவர்கள் இளைஞரைப் பிடித்து அருப்புக்கோட்டை போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி(33) என்பதும், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரை ஒப்படைத்தனர். தங்கப் பாண்டியை ராமானுஜ புரத்தில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் குடும்பத்தினர் சேர்த்தனர். ஆனால், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை விடுவித்ததை கண்டித்து எம்.டி.ஆர். நகர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அதையடுத்து, காப்பகத்தில் இருந்த தங்கப்பாண்டியை நேற்று முன்தினம் இரவு போலீஸார் மீண்டும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று அதிகாலை அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை தங்கப்பாண்டியனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த தங்கப்பாண்டியனின் மனைவி கோகிலாதேவி மற்றும் குடும்பத் தினர், அவரை போலீஸார் தாக்கி கொலை செய்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

மாவட்ட எஸ்.பி. மனோகர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தங்கப்பாண்டியின் சொந்த ஊரான செம்பட்டி பகுதி யில் அவ்வூர் மக்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x