Published : 15 Sep 2022 04:20 AM
Last Updated : 15 Sep 2022 04:20 AM

போதை பொருட்கள் விற்பனையைத் தடுக்க நீலகிரியில் நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கம்

உதகை

போதை பொருட்கள் கடத்தலை தடுக்க, நீலகிரி மாவட்டத்தில் நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வயநாடு, மலப்புரம் மாவட்ட வனப்பகுதிகளில் நக்சல் நடமாட்டம் உள்ளது.

இவர்கள், நீலகிரி மாவட்டத்தில் நுழைவதை தடுக்கவும், நீலகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து இவர்களுக்கு ஆயுதங்கள், போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கவும் நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தலா 13 போலீஸார் அடங்கிய ஒமேகா - 1, ஒமேகா- 2 என 2 பிரிவுகளை சேர்ந்தவர்கள், வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது 10 உதவி ஆய்வாளர்கள் 36 போலீஸார் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதலாக உருவாக்கப் பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கூடுதல் எஸ்.பி. ஏ.மோகன் நவாஸ் கூறும்போது, "இதற்கு முன்னர் நீலகிரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட நக்சல் தடுப்பு பிரிவினர், நக்சல் தடுப்பு வேட்டையில் மட்டும் ஈடுபட்டனர்.

ஆனால், தற்போது உருவாக்கப்பட்டுள்ள அணியினர், போதை பொருட்கள் கடத்தலை தடுக்க சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். தேவைப்படும்பட்சத்தில் நக்சலைட் தடுப்புப் பணியிலும் ஈடுபடுவார்கள்.

இவர்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், மன வலிமை அதிகரிப்பு, வாகன சோதனையில் உள்ள நுணுக்கங்கள், இடர்பாடான சூழ்நிலையை எதிர்கொள்வது மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் சோதனைச்சாவடிகளில் உள்ளூர் போலீஸாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், பணிச்சுமை காரணமாக அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் போலீஸார் மூலமாக சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், 39 பேர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதேபோல 2 வாகனங்கள், 11 கிலோ கஞ்சா மற்றும் 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், நக்சல் தடுப்பு பிரிவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஏப்ரல் முதல் இம்மாதம் வரையிலான காலகட்டத்தில், கஞ்சா கடத்தல் வழக்கில் 125 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் 5 வாகனங்கள், 15 கிலோ கஞ்சா மற்றும் 4,033 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், சோதனைச்சாவடியில் உள்ளூர் போலீஸாருக்கு பதிலாக, தற்போது உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவினர் முழு நேரப் பணியில் ஈடுபடுவார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x