

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 10 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் சூழலுக்கும், உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றை வளர்க்கக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும், இவ்வகை மீன்கள் குறைவான நாட்களில் அதீத வளர்ச்சியடைவது வணிக நோக்கில் சிறப்பாக கருதப்படுவதால், தடையையும் மீறி சிலர் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வகை மீன் வளர்ப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியோருடன் இணைந்து மீன்வளத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையின்போது ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை கண்டறிந்து அழிப்பதுடன், அவற்றை வளர்ப்போருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர். இது குறித்து, தருமபுரி மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநர் கோகுலராமன் கூறியது:
தருமபுரி மாவட்டத்தில் இன்று (நேற்று) மதிகோன்பாளையம் பகுதியில் 1 இடத்திலும், பாலக்கோடு வட்டத்தில் 3 இடங்களிலும் என மொத்தம் 4 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில், 5 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. 13-ம் தேதியும் இவ்வாறு 5 டன் மீன்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. இதுபோன்ற சோதனை மாவட்டம் முழுக்க தீவிரப்படுத்தப்படும்.
இவ்வகை மீன்களை கண்டறிந்து அழிப்பதுடன், அவற்றை வளர்ப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.