Published : 15 Sep 2022 06:20 AM
Last Updated : 15 Sep 2022 06:20 AM

பெண் குரலில் பேசி பழகி முதியவரின் படங்களை ஆபாசமாக மாற்றி பணம் கேட்டு மிரட்டியவர் கைது

சென்னை: பெண் குரலில் பேசி பழகி முதியவரின் படங்களை ஆபாசமாக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியைச் சேர்ந்தவர் முகமது அல்டாப் (24). இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது தந்தையிடம் ஒருவர் செல்போனில் பெண் குரலில் பேசி பழகினார். பின்னர்தந்தையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிவைத்து, ரூ.7 லட்சம் கேட்கிறார்.

பணம் தரவில்லையெனில், ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அல்டாப்பின் தந்தையிடம் டெலிகிராம் செயலி மூலம் பெண் குரலில் பேசி பெண் என நம்பவைத்து, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பெற்றதும், பின்னர் அப்படங்களை ஆபாசமாக மாற்றியமைத்து, புகார்தாரருக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் தருவதாக கூறி அவரை காவல்நிலையம் அருகே வரவழைத்து மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அப்துல்லா(32) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x