Last Updated : 13 Sep, 2022 10:53 PM

 

Published : 13 Sep 2022 10:53 PM
Last Updated : 13 Sep 2022 10:53 PM

தனது இரு குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் - நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

நாமக்கல்: கொல்லிமலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் தனது இரு குழந்தைகளையும் வீசியெறிந்து கொலை செய்த தந்தைக்கு நாமக்கல் நீதிமன்றம்இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர்நாடு அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (29). இவருக்கு பாக்கியம் (24) என்ற மனைவி மற்றும் கிரிதாஸ் (8), கவிதர்ஷிணி (6) என ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த பாக்கியம் முன் கணவரைப் பிரிந்து கொல்லிமலை அரியூர்நாடு கவரப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

குழந்தைகள் இருவரும் கொல்லிமலை கவரப்பட்டி அருகே தெம்பளம் ஊராட்சியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி கவரப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி, அவர்களிடம் சமாதானம் பேசி குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும், மனைவி பாக்கியத்தையும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் இருவரை மட்டும் சீரஞ்சீவியுடன் பாக்கியத்தின் பெற்றோர் அனுப்பியுள்ளனர். இச்சூழலில் தந்தையுடன் அனுப்பப்பட்ட குழந்தைகள் இரு தினங்களாகியும் பள்ளிக்கு செல்லவில்லை என்ற தகவல் பாக்கியத்துக்கு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக கணவர் சிரஞ்சீவியை தொடர்பு கொண்டபோதும் அவர் அதுகுறித்து பேசவில்லை. இதில் சந்தேகமடைந்த பாக்கியம், கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சிரஞ்சீவியை அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே ஆண்டு நவ.,11ம் தேதி கொல்லிமலை செம்மேடு அருகே சீக்குப்பாறை எனும் இடத்தில் உள்ள வியூபாயிண்டில் இருந்து இரு குழந்தைகளையும் வீசியெறிந்து கொலை செய்ததாக தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார் சிரஞ்சீவி.

அவர் அளித்த தகவலின் பேரில் கொல்லிமலை தீயணைப்புத் துறையினர் சீக்குப்பாறை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கிச் சென்றபோது தேடியபோது 300 அடி பள்ளத்தில் குழந்தைகள் கிரிதாஸ், கவிதர்ஷினி இருவரும் இறந்தநிலையில் கண்டெடுத்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வாழவந்திநாடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிரஞ்சீவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி தனது இரு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சீரஞ்சீவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x