

கரூர் அருகே கல் குவாரிக்கு எதிராகபோராடியவர் வேன் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று 2-வது நாளாக சடலத்தைப் பெற மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் குப்பம் அருகேயுள்ள காளிப்பாளையம் வெட்டுக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜெகநாதன்(49). விவசாயி. அப்பகுதியில், உரிமம் காலாவதியான நிலையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த கல் குவாரி குறித்து, ஜெகநாதன் பல்வேறு புகார்களை அளித்து வந்தார்.
இதனால், 2019-ம் ஆண்டு ஜெகநாதனை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக, கல்குவாரி உரிமையாளரான ஆண்டாங்கோவிலைச் சேர்ந்த செல்வகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கல் குவாரிக்கு எதிராக ஜெகநாதன் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, ஆக.15-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் கல் குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி மனு அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் கனிம வளத் துறை இக்குவாரியை மூடியது.
இந்நிலையில், ஜெகநாதன் செப்.10-ம் தேதி வீட்டிலிருந்து காருடையாம்பாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக தனியார் கல் குவாரிக்கு சொந்தமான வேனை ஓட்டிவந்த ஓட்டுநர் சக்திவேல்(24), ஜெகநாதன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது வேனை மோதியுள்ளார்.
இதில், ஜெகநாதன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அப்போது, வேனில் கல் குவாரி ஊழியர்ரஞ்சித்(44) என்பவரும் உடனிருந்துள்ளார்.
இது குறித்து க.பரமத்தி போலீஸில் ஜெகநாதன் மனைவி செப்.10-ம் தேதி அளித்த புகாரின் பேரில், கொலை வழக்குப் பதிவு செய்து, கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார்(39), வேன் ஓட்டுநர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெகநாதனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரி, சடலத்தை பெறமறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஜெகநாதனின் குடும்பத்தாரிடம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி, புகழூர் வட்டாட்சியர் மோகன்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், 2-வது நாளாக நேற்றும் சடலத்தை பெறாமல் ஜெகநாதனின் உறவினர்கள் திரும்பி சென்றனர். இதனால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலேயே ஜெகநாதன் உடல் 2 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்: இதனிடையே, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர்.ராமசாமி தலைமையில் க.பரமத்தி கடைவீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைவர்கள் கண்டனம்: கே.பாலகிருஷ்ணன்: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் கல் குவாரி மாபியாக்களால் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.
எனவே, ஜெகநாதன் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகள் மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவதோடு, இதற்கு துணை போகும் அதிகாரிகள், காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஜெகநாதன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும், வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
அன்புமணி: சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய ஒருவரை கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே தோன்றுகிறது.
அது குறித்து விசாரணை நடத்துவதுடன், ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். ஜெகநாதனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
பூவுலகின் நண்பர்கள்: ஜெகநாதன் கொலையில் தொடர்புடைய அனைவருக்கும் சட்டப்படி தண்டனை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்துக்கென கனிம வளக் கொள்கை வகுப்பது மிகவும் அவசியம்.
இக்கொள்கை மூலம் தமிழகத்தின் கனிம வளத் தேவை கணக்கிடப்பட்டு அத்தேவைக்கேற்ப மட்டும் கனிம வளங்களைப் பெறும் வகையில் குவாரிகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.