Published : 12 Sep 2022 06:41 AM
Last Updated : 12 Sep 2022 06:41 AM

நூதன முறையில் ஏடிஎம் கார்டை மாற்றி பணம் எடுத்து மோசடி: ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவன ஊழியர் கைது

பிரபு

சென்னை: ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதுபோல் நடித்து நூதன முறையில் ஏடிஎம் கார்டை மாற்றி பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் ஜாக்குலின் (27). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில், அவரது நிறுவனத்தின் ஏற்பாட்டில் வங்கி ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அதை செயல்பட வைப்பதற்காக கடந்த 6-ம் தேதி வியாசர்பாடி, எம்கேபி நகர் 1-வது குறுக்கு தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்துக்கு சென்றுள்ளார். தனது புதிய ஏடிஎம் கார்டை செயல்பட வைப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார். அப்போது ஏடிஎம் மையத்தில் நின்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஜாக்குலினுக்கு உதவி செய்வது போல நடித்துள்ளார்.

பின்னர், அந்த நபர் தன்னிடம் இருந்த போலியான எஸ்பிஐ கார்டைகொடுத்துவிட்டு ஜாக்குலின் வைத்திருந்த ஒரிஜினல் கார்டை எடுத்துக்கொண்டு நைசாக அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஜாக்குலினின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.29,500 பணம் எடுத்ததுபோல் அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜாக்குலின் இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.

ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தனர். இதில், ஜாக்குலினின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டவர் பெரம்பூர், பாரதி தெரு, தர் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பிரபு(55) என்பது தெரியவந்தது. மத்திய அரசு ஊழியரான இவர் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

பிரபு இதேபோன்று உதவுவதுபோல் நடித்து பலரிடம் கைவரிசை காட்டியுள்ளார். அவரிடமிருந்து 270 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x