

பல்லடம் அருகே வடுகபாளையம்புதுார் ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்த விவசாயி கோபால் (52). கடந்த 7-ம் தேதி இவரது வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார்.
அப்போது, வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்ததில் அதிர்ச்சியடைந்தார். இளைஞர் அங்கிருந்து நகர்ந்தபோது, நாயும் ஆக்ரோஷமாக பாய தயாரானது. இதையடுத்து அங்கேயே இளைஞர் அமர்ந்தார்.
அதிகாலை கோபால் வெளியே வந்து பார்த்தபோது, இளைஞரை வளர்ப்பு நாய் சிறைபிடித்திருப்பதை பார்த்தார். இதுதொடர்பாக, பல்லடம் போலீஸாருக்கு கோபால் தகவல் அளித்தார்.
விசாரணையில், பிஹாரை சேர்ந்த தருண்பாக் (22) என்பதும், அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தருண் பாக் அங்கிருந்து தப்பினர்.
பல்வேறு திருட்டு வழக்குகள் அவர் மீது இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.