Published : 09 Sep 2022 07:20 AM
Last Updated : 09 Sep 2022 07:20 AM
திருப்பூர்: திருப்பூர் அங்கேரிபாளையம் மகா விஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (45). பெயின்டர். இவரது மனைவி செல்வி (40). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தனியார் நிதி நிறுவனத்தில் செல்வி கடன் பெற்றுள்ளனர். அசல் மற்றும் வட்டியுடன் மாதந்தோறும் ரூ.4,700 தவணைத் தொகை செலுத்தி வந்துள்ளார். கடன் பெற்ற தொகையைவிட, அதிகளவில் நிதி நிறுவனம் வட்டி வசூலித்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக நிதி நிறுவனத்தில் தம்பதி முறையிட்டனர். அப்போது, ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரம் செலுத்திய நிலையில், மேலும் எதற்கு ரூ.ஒரு லட்சம் செலுத்த வேண்டுமென கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வீட்டில் தம்பதி இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதில் விரக்தியடைந்த ராஜேஷ்கண்ணன், திருப்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது சட்டைப் பையில் இருந்து போலீஸார் கைப்பற்றிய கடிதத்தில், "எனது சாவுக்கு காரணம், மனைவி கடன் பெற்ற தனியார் நிதி நிறுவனம் தான் என' குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சடலத்தை ரயில்வே போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், குமார் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தை குடும்பத்தினர் நேற்று முற்றுகையிட்டு, அவிநாசி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT