

புதுச்சேரி: காரைக்கால் பள்ளி மாணவர் கொலை தொடர்பாக டாக்டர்கள் குழு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில் சிசிக்சையிலோ, மருத்துவர்கள் மீதோ எவ்வித குறையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமணிகண்டன். 8ம் வகுப்பு படிக்கும் பாலமணிகண்டன் வகுப்பிலும், போட்டிகளிலும் முதலிடம் பிடித்து வந்தார். இதனால் சக மாணவியின் தாயார் சகாயராணி விஷம் கலந்த குளிர்பானத்தை வாட்ச்மேனிடம் கொடுத்தனுப்பினார். இதை அருந்திய பாலமணிகண்டன் மயங்கி விழுந்ததால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து, சகாயராணி கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவருக்கு சிகிச்சை அளித்ததில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், புதுவை சுகாதாரத் துறை காரைக்கால் மாணவர் மரணம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் நல மருத்துவர் முரளி தலைமையில் டாக்டர்கள் ரமேஷ், பாலசந்தர் அடங்கிய 3 பேர் விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்தனர். அக்குழு காரைக்கால் சென்று ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டதற்கு, "காரைக்கால் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை சுகாதாரத்துறை செயலருக்கு அனுப்பிவிட்டேன்.
சிகிச்சையளித்த காரைக்கால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குறைச்சொல்லி எதுவும் இல்லை. குளிர்பானத்தில் எந்த வகையான விஷம் கலந்துள்ளது எனத் தெரியவில்லை. எந்த வகை விஷம் என தெரிந்தால்தான் சரியான சிகிச்சை தரமுடியும். பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகே அதில் எந்த வகை விஷம் கலந்திருந்தது என்பது தெரியும். பிரேதப் பரிசோதனை அறிக்கை வர ஒரு வாரம் ஆகும்" என்று குறிப்பிட்டார்.