

முசிறி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஆசிரியை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள கலிங்கமுடையான்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரங்கராஜ் மகன் மோகன்தாஸ்(35). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
லேசான பார்வைத்திறனற்ற இவர், 7-ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவலறிந்த குழந்தைகள் நலக் குழுமத்தினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முசிறி அனைத்து மகளிர் போலீஸாருக்கு பரிந்துரை செய்தனர்.
அதனடிப்படையில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் மோகன்தாஸை முசிறி அனைத்து மகளிர் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரது செல்போனை ஆய்வுசெய்தபோது பாலியல் வன்மம் நிறைந்த காட்சிகளை இவர் தொடர்ச்சியாக பார்த்து வந்தது தெரியவந்தது.
இதனால், வேறு மாணவிகளிடம் இதுபோல பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஆசிரியர் மோகன்தாஸின் அத்துமீறிய செயல்பாடுகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரியும் லில்லி என்பவரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது அந்த ஆசிரியை இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் வகையில் மாணவிகளை மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆசிரியை லில்லி மீதும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.