

கோவை: ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 7 பயணிகளிடம் இருந்து, நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்க நகைகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் காலை 6.20 மணிக்கு கோவையில் தரையிறங்கி மீண்டும் 7 மணிக்கு ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஷார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கண்காணிப்பு பணி மேற்கொண்ட வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், சந்தேகப்படும் வகையில் அந்த விமானத்தில் வந்த 7 பேரிடம் சோதனை நடத்தினர்.
அவர்கள் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட் பகுதியில் தங்க செயின், வளையல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 3.5 கிலோ எடை கொண்ட ரூ.1.83 கோடி மதிப்புடைய கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் ரஹமான் (30) என்ற பயணியை கைது செய்தனர்.