Published : 07 Sep 2022 06:20 AM
Last Updated : 07 Sep 2022 06:20 AM
சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே அணியைச் சேர்ந்தவர்களிடையே யார் கும்பல் தலைவன் என்ற போட்டியில் கொலை முயற்சி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
பல்லாவரம், தென்னேரி பகுதியில் வசித்து வருபவர் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற மதுரைபாலா (30). இவர் குற்ற வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருந்துவருகிறார்.
இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சென்னை அசோக் நகர் பகுதியில் சிவகுமார் என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக வேலூர் ஆயுதப்படை போலீஸார் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு பாலாவை அழைத்து வந்தனர்.
அப்போது, அங்கு ஏற்கெனவே பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் பாலாவை கொலை செய்யமுயன்றது. சுதாரித்துக் கொண்ட போலீஸார் பாலாவை பத்திரமாக மீட்டனர். அப்போது, பாரதி என்ற காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது ஒருபுறம் இருக்க தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடமுயன்ற 5 பேரில் 3 பேரை போலீஸார் பிடித்தனர். எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் முன் விரோதத்தில் பாலாவை கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
தாக்குதல் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பிடிபட்டவர்கள் சென்னை செனாய் நகரைச் சேர்ந்த சக்திவேல், அதே பகுதியைச் சேர்ந்தஅருள்பிரசாத், குன்றத்தூர் ஒண்டி காலனியைச் சேர்ந்த அப்துல்மாலிக் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அப்பாஸ், விக்கி ஆகிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
கொலை முயற்சி ஏன்?
மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடியான சிவக்குமார் அசோக் நகரில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பாலா, தற்போது கைது செய்யப்பட்ட 3 பேர் உட்பட 9 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அனைவரும் ஒரே அணியாக செயல்பட்டுள்ளனர். பாலா தலைவர் போல் இயங்கியுள்ளார்.
சமீப காலமாக அவர்களது அணியில் சக்திவேலின் வளர்ச்சி அதிகமாக இருந்துள்ளது. ரவுடிகளின் தலைவன் போல் அவர் செயல்பட தொடங்கியுள்ளார். இதனால் அந்த அணியின் ஒரு தரப்பினர் ‘இதுகுறித்து பாலாவிடம் சொல்லிவிடுவோம்; அவர் உன்னை தீர்த்து கட்டிவிடுவார்’ என்று எச்சரித்துள்ளனர்.
எனவே பாலா தன்னை கொலை செய்யும் முன் அவரை தீர்த்து கட்டிவிடலாம் என்று எண்ணி சக்திவேல் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.
கைதானவர்களிடமிருந்து 3 கத்திகள் மற்றும் 2 பெப்பர் ஸ்பிரே பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், கொலை முயற்சி நடைபெற்றதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். பலத்த சோதனைக்கு பிறகே அனைவரும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
கைதானவர்களிடமிருந்து 3 கத்திகள் மற்றும் 2 பெப்பர் ஸ்பிரே பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT