Published : 06 Sep 2022 07:01 AM
Last Updated : 06 Sep 2022 07:01 AM

வலைதள, சைபர் குற்றங்களை தடுக்க புதிய பிரிவான ‘சமூக ஊடக குழு’ தொடக்கம்: டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு

சென்னை: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையில் மாநகர, மாவட்ட அளவில் சமூக ஊடக குழு என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அவதூறு, வதந்தி பரப்புவதும், தனிநபர் தாக்குதல்கள் நடத்துவதும் சமீபகாலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கிலும் பிரச்சினை ஏற்பட்டது.

எனவே, சமூக வலைதளங்களை போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து, உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.

வதந்தி பரப்புவதை தடுக்க...

அதன்படி, யூ-டியூப், ட்விட்டர்,முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க காவல் துறையில் மாநகர, மாவட்ட அளவில் சமூக ஊடக குழு தொடங்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: யூ-டியூப், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பி, அதன்மூலம் குழப்பம், மோதல், கலவரங்களையும், காவல் துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது.

அதேபோல, இணைய வழியில், பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரை விரைந்து கண்டுபிடிப்பதும் அவசியமாகிறது. அதற்காக, சென்னை உட்பட 9 மாநகரங்கள், 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள், காவலர்களைக் கொண்ட சமூகஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.

தவறான பதிவுகளை நீக்குவது

கணினிசார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இக்குழு இயங்கும்.

சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் விஷமிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அத்தகைய தவறான பதிவுகளை நீக்குவது, அவர்களது சமூகஊடகக் கணக்குகளை முடக்குவது, கணினிசார் குற்ற வழக்குகள் பதிவு செய்வது ஆகிய பணிகளில் இக்குழு துரிதமாக ஈடுபடும்.

இதன்மூலம் சாதி, மத, அரசியல் மோதல்களை தடுத்து, சட்டம் -ஒழுங்கை பராமரிக்க இக்குழு உதவும். இவ்வாறு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x