Published : 05 Sep 2022 04:20 AM
Last Updated : 05 Sep 2022 04:20 AM

திருச்சியில் இருந்து உதகைக்கு வந்த வியாபாரிகளை வெட்டி ரூ.30 லட்சம் கொள்ளை: காரில் தப்பிய இருவர் கைது

உதகை

திருச்சியில் இருந்து உதகைக்கு வந்த 2 வியாபாரிகளை அரிவாளால் வெட்டி ரூ.30 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (55). இவரது மகன் யுவராஜ் (25). இருவரும் உதகையில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை வசூல் செய்து, ஞாயிற்றுக்கிழமை உதகைக்கு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இதற்கு அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.

அதன்படி, ரூ.30 லட்சம் ரொக்கத்துடன், அரசு பேருந்தில் நேற்று அதிகாலை உதகை வந்தனர். இருவரும் ஏடிசி சுதந்திர திடல் நிறுத்தத்தில் இறங்கியபோது, பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள், இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையுடன் தப்பினர்.

அங்கிருந்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, உதகையில் இருந்து வெளி மாவட்டம் செல்லும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குன்னூர் அருகேகாட்டேரி பகுதியில் அந்த கார்பிடிபட்டது. காரில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டதோடு, கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த சந்திரபோஸ் (36), ரவிராகுல் (32)என்பது தெரியவந்தது. இருவரிடமும் உதகை பி-1 காவல்நிலைய ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காயமடைந்த தங்கராஜ், மகன் யுவராஜ் ஆகியோருக்கு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு வாகனத்தில் தப்பிய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x