Published : 05 Sep 2022 07:05 AM
Last Updated : 05 Sep 2022 07:05 AM

சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது: கொலைக்கான பரபரப்பு பின்னணி தகவல்கள்

கணேசன்

சென்னை: சென்னை ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் (68). கட்டுமான தொழிலும் செய்து வந்துள்ளார்.

இருதினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற பாஸ்கரன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விருகம்பாக்கம், சின்மயா நகர் பாலம் அருகே சாலையோரம் கருப்பு நிற கவரில் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைத்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், விருகம்பாக்கம் அரங்கநாதன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பாஸ்கரின் கார் மீட்கப்பட்டது.

அதே குடியிருப்பில் வாடகைக்கு தங்கிருந்த கணேசன் (54) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றதால், சந்தேகமடைந்த போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், செங்குன்றம் அருகே பதுங்கியிருந்த கணேசனை தனிப்படை போலீஸார் நேற்று பிடித்து விசாரித்தனர். இதில், பாஸ்கரனை கொலை செய்ததை கணேசன் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவரை போலீஸார் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம்

கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறியதாவது:

கைதான கணேசன் திரைப்படங்களுக்கு கதை எழுதுவதாகக் கூறி விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். 7 ஆண்டுகளாக பாஸ்கரனுடன், கணேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணேசன் பாலியல் தொழில் தரகராகவும் இருந்தார்.

இதனால், பாஸ்கரன் பெண்களுடன் தனிமையில் இருக்க ஆசைப்படும் போது, நட்சத்திர ஓட்டலில் அறைகளை எடுத்து, இளம் பெண்கள் மற்றும் துணை நடிகைகளை ஏற்பாடு செய்து கொடுப்பார். கணேசன் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளை இல்லாதபோது, தனது வீட்டுக்கே பாஸ்கரனையும், அழகிகளையும் வரவழைத்து அதற்குண்டான தொகையை கணேசன் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று 2 பெண்கள் புதிதாக வந்திருப்பதாக கணேசன் கூறியதையடுத்து அவரது வீட்டுக்கு பாஸ்கரன் சென்றுள்ளார். அப்போது 2 பெண்களும் வரதாமதம் ஆனதால், பாஸ்கரனுக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கணேசன் குடும்பம் குறித்து பாஸ்கரன் அவதூறாக பேசியதால், ஆத்திரமடைந்த கணேசன் பிடித்து தள்ளியதில் கீழே விழுந்த பாஸ்கரன் மயங்கியுள்ளார். மேலும் ஆத்திரம் தாங்காமல் கட்டையால் பாஸ்கரன் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

பாஸ்கரனை கொலை செய்ய பயன்படுத்திய கம்பி, இருசக்கரவாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

ஆணையர் விளக்கம்

பாஸ்கரன், அவ்வப்போது கணேசனின் வீட்டுக்கு சென்று மது அருந்துவது வழக்கம். அவ்வாறு 2-ம் தேதி பாஸ்கரன், கணேசனின் வீட்டுக்கு சென்று மது அருந்திய நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கணேசனை பாஸ்கரன் திட்டி கையால் தாக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கணேசன் அருகில் இருந்த கட்டையால் பாஸ்கரனை தாக்கியதில், பாஸ்கரன் இறந்துள்ளார் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x