Published : 04 Sep 2022 07:32 AM
Last Updated : 04 Sep 2022 07:32 AM
சென்னை: சென்னையில் திரைப்படத் தயாரிப்பாளர் பாஸ்கரன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (67). இவர் 1997-ல் ராம்கி நடித்து வெளியான ‘சாம்ராட்’ உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். கட்டுமானத் தொழிலும் செய்து வந்துள்ளார். இவரது மனைவி பாக்கியம்மாள். 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்ட பாஸ்கரன், விருகம்பாக்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் இருப்பதாகவும், அதை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், குடும்பத்தினர், ஆதம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் கூவம் ஆற்றின் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் ரத்த காயங்களுடன் கருப்பு நிற பிளாஸ்டிக் பையால் முழுமையாக மூடப்பட்ட ஆண் சடலம் கிடப்பதாக விருகம்பாக்கம் போலீஸாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
மர்ம நபர்களால் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா, வேறு காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
அவர் ஓட்டி வந்த கார் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளது. அவரது ஏடிஎம் கார்டு மூலம்அதிக அளவில் பணம் எடுத்துள்ளனர். அவரது செல்போன் அழைப்புகள், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT