

சென்னை: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 3,469 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் நன்கு தெரிந்த நபர்களால்தான் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தரவுகள் எச்சரிக்கின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்திய அளவில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி சாலை விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. 2021-ம் ஆண்டில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 16.2 சதவீதம் அதிகமாகும். இதில், போக்சோ வழக்குகள் 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 2021-ம் ஆண்டில் மட்டும் 3469 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 50 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் ஆகியோர் 6 வயதிற்கு குறைவானவர்கள்; 226 பெண் குழந்தைகள் மற்றும் 16 ஆண் குழந்தைகள் ஆகியோர் 6 வயதுக்கு அதிகமானவர்கள்; 1389 பெண் குழந்தைகள் மற்றும் 11 ஆண் குழந்தைகள் ஆகியோர் 12 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்கள்; 1770 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகள் ஆகியோர் 16 முதல் 18 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட 3,433 வழக்குகளில் 3,415 வழக்குகளின் கிட்டத்தட்ட 99.5 சதவீத வழக்குகளின் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இதில், 292 பேர் குடும்ப உறுப்பினர்கள், 956 குடும்ப நண்பர்கள், அருகில் வசிப்பவர்கள், பணியாளர்கள் அல்லது தெரிந்த நபர்கள். 2,167 குற்றவாளிகள் நண்பர்கள், ஆன்லைன் மூலம் பழக்கமானவர்கள், காதலர்கள். 18 பேர் அடையாளம் தெரியாதவர்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் முன்னாள் அமைப்பாளர் ஆண்ட்ரூ சேசுராஜுவிடம் கேட்டபோது, "2007-ம் ஆண்டு இந்திய அரசு 13 மாநிலங்களில் உள்ள 18 ஆயிரம் குழந்தைகளிடம் ஓர் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் நூறில் 51 குழந்தைகள் ஏதாவது ஒருவகையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியானது.
அவ்வாறு இருக்கும்போது, 2021-ம் ஆண்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது மட்டும் 3,433 என்றால் வெளியில் சொல்லாத வழக்குகள் எத்தனை இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்த எண்ணிக்கை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறை குறித்து அச்சமின்றி புகார் அளிக்க இதுபோன்ற குற்ற எண்ணிக்கை குறித்த விவரங்கள் வழிவகுக்கும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிகமான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 99.5 சதவீத குற்றங்கள் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களால் நிகழ்த்தப்படுகிறது. அதேபோல் வளிரிளம் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஓர் ஆணை எப்படி அணுகுவது உள்ளிட்ட உணர்வுகளை கையாள தெரியாததால், இதுபோன்ற குற்றங்கள் நிகழ்கின்றன. இந்தக் குற்றங்களின் எண்ணிக்கை மற்றும் நடவடிக்கை குறித்த விவரங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு, காவல் துறை, பெற்றோர் உள்ளிட்டோர் மீதான ஒருவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.