

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்அப் மெசேஜ் பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் நடுவர் மன்றத்தில் திடீரென மாயமானது.
இந்த விவரத்தை நேற்று, சம்பந்தப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களிடம், நடுவர் புஷ்பராணி தெரிவித்தார். பின்னர், மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இதுசம்பந்தமாக ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா என்று நடுவர் கேட்டார்.
அதற்கு அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மாயமான ஆவணங்களின் நகல்களை தாக்கல் செய்யும்படி சிபிசிஐடி போலீஸாரிடம் நடுவர் கூறினார். இதற்கு சிபிசிஐடி போலீஸார், உயர்அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து ஆவணங்களின் நகல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக கூறினர்.
தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை நடைபெற்றது. இதில், மதுரை தெற்கு மண்டல கலால் பிரிவு எஸ்பி வருண்குமார், பெரம்பலூர் போலீஸ் வினோத்குமார் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
பின்னர் இவ்வழக்கின் விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார்.