ஜார்க்கண்ட் | பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பாஜக பிரமுகர் கைது - நடந்தது என்ன?

பாஜக பிரமுகர் சீமா பத்ரா | கோப்புப் படம்
பாஜக பிரமுகர் சீமா பத்ரா | கோப்புப் படம்
Updated on
1 min read

ராஞ்சி: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த விவகாரத்தில் ஜார்கண்ட் மாநில பாஜக பிரமுகரான சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் அந்தக் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஞ்சி போலீசார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சீமா பத்ரா தன்னை சித்ரவதை செய்து வருவதாக வீடியோ மூலம் தெரிவித்திருந்தார் அவரது வீட்டு பணிப்பெண். அந்த வீடியோ வைரலானது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று பாஜக சஸ்பெண்ட் நடவடிக்கையை மேற்கொண்டது. சீமா பத்ரா பாஜக தேசிய செயற்குழுவின் மகளிர் அணி உறுப்பினராக இருந்தார். அவரது கணவர் மகேஸ்வர் பத்ரா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

என்ன நடந்தது? - பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுனிதா ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் பட்ராஸ் பகுதியில் உள்ள சீமா பத்ரா வீட்டில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார். சில காலம் சீமா பத்ராவின் மகள் வத்சலா பத்ராவின் டெல்லி வீட்டில் பணிபுரிந்துள்ளார். டெல்லியில் இருந்து வத்சலா பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு, சுனிதா மீண்டும் ராஞ்சிக்கு திரும்பியவர், சீமாவின் வீட்டில் பணிபுரிந்துள்ளார். அப்போதிலிருந்தே அவர் சீமா பத்ராவிடம் இருந்து சித்ரவதைகளை சந்தித்து வந்துள்ளார். சுனிதா தற்செயலாக வீட்டை வெளியே செல்ல நேர்ந்தால், அவர் சிறுநீரை வாயால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அந்த அளவுக்கு கொடுமைகளை எதிர்கொண்டுள்ளார்.

சீமாவின் மகன் ஆயுஷ்மான் சுனிதாவுக்கு உதவ முயன்று ஜார்க்கண்ட் அரசாங்கத்தில் பணியாளர் துறை அதிகாரியாக இருக்கும் அவரது நண்பர் விவேக் பாஸ்கியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவிக்க இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. தொடர்ந்து சீமா மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அறையில் அடைக்கப்பட்ட நிலையில் சுனிதா மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதும் அவரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in