தி.மலையில் 2 அரசு பேருந்துகள் மோதி விபத்து ஓட்டுநர்கள் உட்பட 40 பேர் காயம்

தி.மலையில் 2 அரசு பேருந்துகள் மோதி விபத்து ஓட்டுநர்கள் உட்பட 40 பேர் காயம்
Updated on
1 min read

திருவண்ணாமலை: சென்னையில் இருந்து மேல்மருவத்தூர், வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் அரசுப் பேருந்து, வந்தவாசி நோக்கி நேற்று காலை வந்தது.

பேருந்தை வந்தவாசியைச் சேர்ந்த அண்ணாமலை ஓட்டினார். வேலூரில் இருந்து வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் செல்லும் மற்றொரு அரசுப் பேருந்து வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்றது. இந்தப் பேருந்தை ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டினார்.

வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலை, கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே இந்த இரண்டு அரசுப் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 2 பேருந்துகளின் முன்பக்கமும் சேதமடைந்தன. விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்கள் அண்ணாமலை, ராஜேந்திரன் மற்றும் 2 பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 40 பேர் காய மடைந்தனர்.

இந்த தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் காவல் துறையினர், வந்தவாசி தீயணைப் புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த தகவல் அறிந்த வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in