

புதுடெல்லி: 6 ஆண்டுக்கு மேல் தண்டனை கிடைக்கும் குற்றங்களுக்கு, தடயவியல் விசாரணை கட்டாயம் என்ற நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது.
குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் விகிதம், வளர்ந்த நாடுகளை விட அதிகமாக இருக்கவும், குற்றவியல் நீதி முறைகளை, தடயவியல் அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும் குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை கட்டாயம் என்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தடயவியல் பரிசோதனை வாகனங்கள் வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தடயவியல் சட்டத்தில் மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. ஏனென்றால் சுதந்திரத்துக்குப்பின், இந்த சட்டங்களை யாரும் இந்திய கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை. சுதந்திர இந்தியா கண்ணோட்டத்தில், இந்த சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதனால் இந்த சட்டங்களை மாற்ற பல தரப்பினருடன் நாங்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.
6 ஆண்டுக்கு மேல் தண்டனை கிடைக்கும் குற்றங்களுக்கு, தடயவியல் ஆதாரங்கள் கட்டாயம் என்ற நிலை ஏற்படும்போது, தடயவியல் நிபுணர்களின் தேவை அதிகரிக்கும். தடயவியல் பட்டாதாரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டிய நிலை ஏற்படும். தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் வேலையில்லாமல் இருக்கமாட்டார்கள்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.