Published : 28 Aug 2022 06:54 AM
Last Updated : 28 Aug 2022 06:54 AM

திருமண அழைப்பிதழ் தர வந்த நண்பரை பணத்துக்காக கொன்றவருக்கு ஆயுள் தண்டனை உறுதி

மதுரை: பெரம்பலூரைச் சேர்ந்த ராஜன், இவரது தம்பி அரங்கநாதன் ஆகியோர் குவைத்தில் பணிபுரிந்தனர். அரங்கநாதனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் ஊருக்கு வந்திருந்த ராஜன், திருச்சியில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, குவைத்தில் இருந்து வரும் தம்பியை அழைத்து வருவதாகக் கூறிவிட்டு 2008-ல் காரில் சென்றார்.

அங்கு நண்பர்கள் வினோத்குமார், சரவணன் ஆகியோரை சந்தித்தார். பின்னர் ராஜனும், சரவணனும் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். இந்நிலையில் பெட்டவாய்த்தலை தென்னந்தோப்பில் ராஜன் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் சரவணனை கைது செய்தனர். ராஜனை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க செயின், அவரது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றுடன் புதுச்சேரி சென்ற சரவணன், அங்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கியது தெரியவந்தது. இந்த வழக்கில் சரவணனுக்கு திருச்சி நீதிமன்றம் 2012-ல் ஆயுள் தண்டனை வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, 'இதில் கொலையை நேரில் பார்த்த சாட்சியம் இல்லை. குற்றவியல் வழக்கில் சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியத்தில் சம்பவத்தின் தொடர் சங்கிலி வலுவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் வேறு ஆதாரங்கள் தேவையில்லை. இதனால் மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது' என தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x