

காஞ்சிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கையெறி குண்டுகள் மற்றும் 2 கிலோ வெடி மருந்து பொருட்கள் மற்றும் 1 கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் ஒருவரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
இந்த கையெறி குண்டுகள் மூலம் காஞ்சிபுரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலைசெய்ய சதித்தீட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
காஞ்சிபுரம் நகரில் மாண்டுகனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் 2-வதுமாடியில் குருவிலைமலை பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கஞ்சா பதுக்கல்
இந்நிலையில் இவர் குடியிருக்கும் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவகாஞ்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிவசங்கரன் வீட்டில் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த ஒருஅறையில் 1 கிலோ கஞ்சா சிக்கியது.
பின்னர் அறை முழுவதும் சோதனை செய்தபோது அங்கு நாட்டு பட்டாசுகள், வெடிபொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட 4 கையெறி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிவகாஞ்சி போலீஸார் 4 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி சிவசங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையறிந்த அவரது கூட்டாளிகள் 3 பேர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிவசங்கரிடம் நடத்திய விசாரணையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் இங்கு தங்கிருந்து இந்த நாட்டு வெடி குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர் தவிர மேலும் 2 பேரும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க உதவியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்யத் திட்டம் தீட்டியதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியிலேயே நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிருந்து பொருட்கள் கஞ்சா ஆகியவை பறிமுதல்செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.