

பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தாய் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது: எனக்கு 2 மகள்கள் உள்ளனர். சரியாக படிக்காததால் கடந்த 24-ம்தேதி மூத்த மகளை கண்டித்தேன். இதனால், மகள் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேசென்று, ஆவடி இந்திய விமானப்படை சாலை அருகே நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், எனது மகளை திடீரென ஆட்டோவில் ஏற்றிச் சென்று வெள்ளவேடு பகுதியில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு கூறியிருந்தார்.
புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என தெரியவந்தது.
இதையடுத்து, அவர் கைது செய்த போலீஸார் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.