சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர்.
அப்போது, சென்னை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், துபாய் செல்லவிருக்கும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் பயணிக்கிறார் என்று கூறிவிட்டு, தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, விமான நிலைய பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு, செயலிழப்பு நிபுணர்கள், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் உடைமைகளைத் தீவிரமாக சோதனையிட்டனர். எனினும், இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து, சென்னை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, சென்னை மணலியில் இருந்து மாரிவேலன் (41) என்பவர் பேசியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாரிவேலனின் தங்கையும், தங்கை கணவரும் அந்த விமானத்தில் துபாய் செல்வதும், அவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை இருப்பதால், அவர்களது பயணத்தைத் தடுப்பதற்காக வதந்தி பரப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாரிவேலனைப் போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, துபாய் செல்லும் விமானம் தாமதமாக பகல் 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
