Published : 27 Aug 2022 08:13 AM
Last Updated : 27 Aug 2022 08:13 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை கூலித் தொழிலாளியிடம் செல்போனில் பேசி, நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த 3 இளைஞர்களை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(36). கூலித் தொழிலாளியான இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் செல்போனில் தொடர்புகொண்ட ஒரு நபர், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ.8,000 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதை நம்பிய மணிகண்டன், அந்த நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.8,000-ஐ செலுத்தியுள்ளார். பின்னர், அந்த நபர் பல்வேறு காரணங்களைக் கூறி மணிகண்டனிடம் இருந்து பல தவணைகளில் ரூ.1,12,780 வரை பெற்றுக்கொண்டு, கடன் வாங்கிக் கொடுக்கவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணிகண்டன், இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், இந்த மோசடியில் ஈடுபட்ட 3 நபர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அங்கு சென்று 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த சஞ்சய்(22), சித்தார்த்தன்(20), காட்டுமன்னார்கோவில் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம்(25) ஆகியோர் என்பதும், இதேபோல பல்வேறு மாவட்டங்களில் பலரிடம் பேசி பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து ஒரு லேப்டாப், 18 செல்போன்கள்,28 சிம் கார்டுகள் ஆகி யவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த அமர்நாத், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT